மக்களுக்காக குரல் கொடுத்த மணிலாலும், நாடு கடத்திய காலனித்துவ அரசும் | கண்டிசீமை | இரா.சடகோபன்
Description
இந்திய வம்சாவளி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க ரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் ஸ்தாபனப்படுவதற்கு முன்னரே அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பிலும், சர்வதேச ரீதியாகவும் பலமாக குரல் எழுப்பப்பட்டது என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இலங்கையில் மாத்திரம் அன்றி பல்வேறு உலக நாடுகளிலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தன.
இவ்வமைப்புகளில் இலங்கையிலிருந்து குரல் கொடுத்த இந்தியரான டாக்டர். டி. எம். மணிலால் (1881-1956) மிக முக்கியமானவராவார். இந்தியாவில் பரோடா என்ற இடத்தில் பிறந்த இவர் பம்பாயில் (இப்போதைய மும்பை) சட்டக்கல்வி பயின்று சட்டத்தரணி ஆனார். லண்டனில் மிடில் டெம்பிள் என்ற நகரத்தில் சட்டத்தரணியாக கடமையாற்ற 1907ஆம் ஆண்டு அழைக்கப்பட்டார்.
அவர் இக்காலத்தில் மகாத்மா காந்தியின் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்டார். இதன் காரணமாக இவர் மகாத்மா காந்தியால் மொரிசியஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் நீதிமன்ற வழக்குகளில் அவர்களுக்கு உதவ அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டார். 1907ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டு வரை அவர் அங்கே இருந்து செயற்பட்டு, அந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
டாக்டர் மணிலால் தனது மனைவியுடன் ஒக்டோபர் 1921ஆம் ஆண்டு இலங்கை வந்தார். அப்போது இலங்கையில் தொழிற்சங்க மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடும்போக்காளர்களுடன் இணைந்து கொண்டார். அவர்களில் நடேசய்யர், லோரி முத்துக்கிருஷ்ணா, சி .எச். பெர்னாண்டோ ஆகியோர் முக்கியமானவர்கள். இக்காலத்தில் வேல்ஸ் இளவரசர் இலங்கைக்கு வருவதாக இருந்தது. வருடம் 1922, வேல்ஸ் இளவரசனின் வருகையில் மணிலால் தலையிடக்கூடும் என்று பொலிஸார் சந்தேகப்பட்டனர். இதனால் போர்க் கால கட்டளைச் சட்டத்தின்படி மணிலாலை நாடு கடத்த ஆளுநர் கட்டளை பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆபத்தான கட்டளையை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறி கொழும்பு நகரசபை முன்றலில் மாபெரும் கூட்டம் ஒன்று 1922 ஜனவரியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிக்கை இலங்கையில் இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து டாக்டர் மணிலால் உலகத்துக்கு அம்பலப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தினாலேயே அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது என செய்தி வெளியிட்டிருந்தது. (சிலோன் டெய்லி நியூஸ் 9 ஜனவரி 1922) எனினும் இந்த எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாது டாக்டர் மணிலால் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இருந்தாலும் இலங்கையில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய கோ. நடேசய்யர் தொடர்ந்தும் மணிலாலுடனான தனது உறவைப் பேணிவந்தார்.